புதிய பார்வை அணி

தமிழகத்திலும் இந்தியாவிலும் நேர்மையான ஊழலற்ற நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில் போராடி தங்கள் பங்களிப்பை அளித்த தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், காந்தீய சம்தர்ம இயக்கம் ஆகிய கட்சிகளும் பிற தன்னார்வ நிறுவனங்களும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து கூட்டணியை ஏற்படுத்தி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், தேர்தல் தேதிக்கு பின்னர் கூட்டணி நடைமுறைகளை மேற்கொண்டதால் ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி ஊடகங்களின் ஆதரவு என்பது ஏற‌க்குறைய இல்லாத நிலையில் தான் இக் கூட்டணி தேர்தலை சந்தித்தது.தேர்தல் செலவினங்களை மிகப் பெரிய அளவில் திமுக,அதிமுக கூட்டணியினர் மேற்கொண்டதால் எமது கூட்டணியினரின் எளிய தேர்தல் பிரச்சார முறைகள் மக்களை சென்றடையவில்லை என்பதை உணர்ந்துள்ளொம். கடந்த தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் எங்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சீரிய ஆலோசனை மேற்கொண்டோம். ஏற்றுக்கொள்ளப்பட்ட‌ குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிடுவது என்றும் அதனடிப்படையிலே கூட்டணியை முன்னெடுத்து செல்லும் போது மக்கள் எமது கூட்டணியை அங்கீகரித்திட வாய்ப்புள்ளது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.மேலும், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றதிற்கும் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளின் அடிப்படையில் ஆட்சி அமைவதும் பிரதமரும் முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்படுவதும் அரசியல் சாசனப்படி நடைமுறையாக இருப்பினும் 1996க்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பிரதமர் முதலமைச்சர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பதும் வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய நடைமுறையானது குறிப்பாக 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளிப்படையாக நடைபெற்றது. இப்படியொரு பிரதமரும் முதலமைச்சரும் முதன்மைப்படுத்தாத கட்சிகளையும் கூட்டணிகளையும் மக்களும் ஊடகங்களும் முதன்மைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளப்பட்டது. கருத்தில் கொள்ளப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு எமது கூட்டணியின், குறைந்தபட்ச செயல்திட்டம், முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தமிழக தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், ஆகிய கட்சிகள் இணைந்த இக்கூட்டணியை புதிய பார்வை அணி என அழைப்பதென தீர்மானிக்கப்பட்டது. எமது அணியின் குறைந்தபட்ச திட்டங்களின் அடிப்படையில் இணைந்து செயல்பட பிற கட்சிகளையும் அமைப்புக்களையும் பொதுமக்களையும் அன்போடு அழைக்கிறோம்.

வேளாண்மை வளர்ச்சி

தமிழக பொருளாதாரத்தில் வேளாண்மை முதன்மையான இடத்தில் உள்ளது. தமிழகத்தின் 70% மக்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவர்கள் மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதார‌கமாகவும் , கிராம பொருளாதரமாகவும் விவசாயம் உள்ளது.இருப்பினும், விவசாயம் செய்திடக்கூடிய மொத்த நிலத்தின் அளவானது ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருவ‌தோடு மட்டுமின்றி விவசாயிகளின் உற்பத்திக்கான உரிய விலையைப் பெற இயலாதது, பல்வேறு இயற்கை சூழ்நிலைகள் காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவது, இத்தகைய காரணங்கள் சில இருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் வேளாண்மை தொடர்பான அணுகு முறையும் செயலற்ற தன்மைகளும் அடிப்படையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராததற்கும் விவசாயிகளின் அவல நிலை களையப்படாததற்கும் அடிப்படையையாக அமைந்துள்ளன. தொலைநோக்கு கொண்ட வேளாண்மைக் கொள்கை இல்லாததும் வேளாண்மையை காத்திட உரிய செயல்திட்டங்கள் இல்லாததும் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்தாதும் தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி அடையாததும் விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராததற்கும் காரணமாகும். எனவே, குறைந்து வரும் விவசாய நிலங்களின் அளவை உயர்த்துவது, கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு தமிழகம் சார்ந்து கொள்முதல் விலை நிர்ணயித்தலில் மாற்றங்கள், இயற்கை காரணமான வறட்சி,வெள்ளம்,பெரு மழை,பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட விவசாய இழப்பீடுகளுக்கு 15 நாட்களுக்குள்ளாக நிவாரணம் அளித்தல், விவசாய இடுபொருட்களை தேவையான அளவிற்கு விலையில்லாமல் அளித்தல், நவீன விவசாய முறைகளை ஊக்குவித்தல், வேளாண் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு தடை விதித்தல் , விவசாயம் பாதிக்கப்பட்ட காலங்களுக்கு எத்தகைய காப்பீடும் இன்றி இழப்பீட்டு நிதி அளித்தல் ஆகியவை செயல்படுத்தப்படும்.

நேர்மையான ஊழலற்ற ஆட்சி

கடந்த ஆண்டு ஒரு நிறுவனம் 15 மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வில், ஊழல்,கையூட்டு அளிப்பதில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. லஞ்சம் அளிக்காமல் எந்த வேலையும் நிறைவேறாது என்ற நிலையை தமிழகம் அடைந்துள்ளது. இத்தகைய ஊழல்,லஞ்ச செயல்பாடுகளால் தமிழகம் அடைய வேண்டிய வளர்ச்சி ஒரு புறம் பாதிக்கப்பட்டு வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஊழலும் லஞ்சமும் அரசின் சொல்லப்படாத நடவடிக்கையாக‌ மாறி உள்ளது, ஏறக்குறைய எல்லா ஆட்சிகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சாத்தப்பட்டு, அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதுள்ள ஆட்சியில் வருமான வரித்துறையின் சோதனை பல அமைச்சர்களிடத்தில் நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் தங்களை பெரிய கட்சியாக காட்டிக் கொள்ளும் கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பினும் முறைகேடான தேர்தல் செலவினங்களால் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு ஊழலும் லஞ்ச லாவண்யமும் தலை விரித்தாடும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து வருகிறது. இந்நிலை மாறிட, புதிய பார்வை அணியின் நடைமுறைகள் இருந்திடும்.ஊழல் வழக்குகளில் தீர்ப்புகள் ஆறே மாதங்களில் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலற்ற அரசின் செயல்முறைகளுக்காக‌, அரசின் நடைமுறைகளுக்கு காலக்கெடு வகுக்கப்படும். விதி முறைகளின் படி செயல்படாமல் இருந்தாலும் முறைகேடான செயல்பாடுகளுக்கும் அரசு பணியாளர்கள் பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள், இத்தகைய நடவடிக்கைகள் வழியாக ஊழலற்ற தமிழகம் உருவாக்கிட பாடுபடுவோம்.

வறுமை,வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தல்.

வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாகவும் மாநில தனிநபர் வருமானம் ரூபாய் 1,98,750 ஆகவும் உள்ள தமிழ்நாட்டில் அரசில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுவோர் எண்ணிக்கை என்பது மட்டும் ஒரு கோடியே பத்து இலட்சம் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வேலை வாய்ப்பிற்கும் தொடர்பற்ற நிலையை எடுத்துரைக்கிறது. தமிழ்நாடு தேர்வாணையமானது 2018 ஆம் ஆண்டில் பிரிவு நான்கில் 9351 வேலைகளுக்கு விண்ணப்பிக்க அழைத்தபோது இருபது இலட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதுவே, தமிழகத்திலுள்ள வேலையில்லா திண்டாட்டத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சிக்கும் மக்களின் தேவைகளுக்கும் தொடர்பில்லாத நிலையையே இது காட்டுகிறது.70% கிராமப்புறத்தையும் விவசாயத்தையும் அடிப்படையாக கொண்ட மாநிலத்தின் மொத்த வருமானத்தில் வேளாண்மையானது வெறும் 21% மட்டுமே உள்ளது. நகர்புறமயமாக்குதலை அதிக அளவில் கொண்ட தமிழகத்தில் , கிராமப்புறத்திலிருந்து நகர்புறம் நோக்கி வருவோர் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் கிராமப்புற இளைஞர்கள் 50% மேலாக வேலையற்று உள்ளார்கள். நகர்புற வேலை இல்லா திண்டாட்டமும் உயர்ந்தே உள்ளது. நகர்புறங்களில் 58.80% கிராம்ப்புறங்களில் 41.19% வேலையில்லா நிலை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.வேலை வாய்ப்பை பெற்ற பலரும் தங்கள் தகுதிக்குரிய வேலையில் இல்லாமல் இருப்பதும் நிரந்தரமற்ற வேலைகளில் இருப்பதும் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. இவைகளின் காரணமாக வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களின் வாழ்வாதாரமும் நிரந்தர அற்ற நிலையில் உள்ளது. எனவே, கிராம‌ப்புற வளர்ச்சி, வேளாண் அடிப்படை தொழில் வளர்ச்சி, அதே நேரம் சுற்று சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத உற்பத்தி துறை மற்றும் சேவைத் துறைகளின் முறையான வளர்ச்சிக்கும் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

கல்வி வளர்ச்சி

உயர்நிலை,ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து கல்வியும் கட்டணமின்றி அளித்திட வழிவகை காணப்படும்.

குடிநீர்

குடிநீர் இலவசமாக மாநிலம் முழுமையும் அளிக்கப்படும்.

மதுவிலக்கு

முழுமையான மதுவிலக்கு மட்டுமின்றி மதுபான உற்பத்தியும் தமிழகத்தில் தடை செய்யப்படும்.

மக்கள் சந்திப்பு

மக்கள் சந்திப்பு பயணம் மகாத்மா காந்தியின் 150 ஆண்டை முன்னிட்டு வருகின்ற இரண்டு மாதங்கள் தமிழகம் முழுமையும் மக்கள் சந்திப்பு பயணங்கள் மேற்கொள்ளப்படும். இந்த பயணத்தின் போது தமிழக மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் அறிந்து அதற்கான தீர்வுகளும் அலசி ஆராயப்படும். 9. புதிய பார்வை அணியின் பொறுப்பாளர்கள் . தமிழக முற்போக்கு கட்சியின் தலைவர் க.சக்திவேல், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம் .எல்.ரவி ஆகியோர் அமைப்பாளர்களாகவும் இளந்தமிழர் முன்னணி கழகத்தின் தலைவர் செல்வகுமார் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். 10. தமிழக முதலமைச்சர் வேட்பாளர் தேர்தல் நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையிலும் எல்லா கூட்டணிகளும் முதல்வர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல்களை சந்தித்து வருவதை நடைமுறைப்படுத்தி வருவதாலும் நடைபெறுகின்ற தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரின் தகுதியும் திறமையும் முன்னிலைப்படுத்தப்பட்டு மக்களும் ஊடகங்களும் சீர்தூக்கிப்பார்த்து தேர்தல் அணுகு முறையை மேற்கொள்வதாலும் புதிய பார்வை அணியின் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய முதல்வர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்பதென தீர்மானித்துள்ளது. அந்த வகையில், முதல்வர் வேட்பாளர் தூய்மையானவராகவும் நேர்மைக்கான போராளியாகவும் சமுதாயத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவருமாக இருந்திட வேண்டுமென்பதை முதல் அடிப்படையாக கொண்டு பிற அரசியல் தகுதிகளையும் திறமைகளையும் கொண்டவராக இருந்திட வேண்டுமென்பதை உணர்ந்துள்ளோம். ஒரு மாத மக்கள் சந்திப்பு பயணங்களுக்கு பின்னர், 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய முதல்வர் வேட்பாளரை புதிய பார்வை அணி அறிவித்திடுமென்பதை தெரிவித்துக்கொள்கிறோம்