இலக்கு

அதிகாரம் மிகவும் வலிமையானது அதை அடைந்தால் எல்லாம் எளிமையானது என்பதை உணர்ந்து வர இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் புதிய பார்வை கூட்டணியின் சார்பாக 234 தொகுதியிலும் போட்டியிட்டு மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செயல் என்பதை உண்மை ஆக்குவதே இலக்கு.

தமிழகத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் உண்மையான பற்று கொண்டு பல வருடங்களாக மக்களுடன் மக்களுக்கான செயல்பாடுகளில் தம்மை உண்மையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டு வரும் கட்சிகள் நாங்கள். ஆரம்பிக்கப்பட்ட சூழல் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் சந்திக்க கூடிய களம் என்பது ஒன்று தான் என்பதனை புரிந்து கொண்டு தமிழக மக்களிற்கு நேர்மையான மக்கள் விரும்பும் நல்லாட்சியை மக்களாட்சியை வழங்க தனித்தனியாக செயல்பட்டு வந்த நாங்கள் ஒன்றிணைந்து புதிய பார்வை கூட்டணி துவங்கியுள்ளோம். ஒற்றை கருத்துடைய மக்களுக்காக செயல்பட்டு வரும் கட்சிகள்/அமைப்புகள்/சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒரு பாலமாக இருப்போம்.

புதிய பார்வை அணி

தமிழகத்திலும் இந்தியாவிலும் நேர்மையான ஊழற்ற நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில் போராடி தங்கள் பங்களிப்பை அளித்த தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், காந்தீய சம்தர்ம இயக்கம் ஆகிய கட்சிகளும் பிற தன்னார்வ நிறுவனங்களும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து கூட்டணியை ஏற்படுத்தி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், தேர்தல் தேதிக்கு பின்னர் கூட்டணி நடைமுறைகளை மேற்கொண்டதால் ஊடகங்கள் முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமின்றி ஊடகங்களின் ஆதரவு என்பது ஏற‌க்குறைய இல்லாத நிலையில் தான் இக் கூட்டணி தேர்தலை சந்தித்தது.தேர்தல் செலவினங்களை மிகப் பெரிய அளவில் திமுக,அதிமுக கூட்டணியினர் மேற்கொண்டதால் எமது கூட்டணியினரின் எளிய தேர்தல் பிரச்சார முறைகள் மக்களை சென்றடையவில்லை என்பதை உணர்ந்துள்ளொம். கடந்த தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் எங்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சீரிய ஆலோசனை மேற்கொண்டோம். ஏற்றுக்கொள்ளப்பட்ட‌ குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிடுவது என்றும் அதனடிப்படையிலே கூட்டணியை முன்னெடுத்து செல்லும் போது மக்கள் எமது கூட்டணியை அங்கீகரித்திட வாய்ப்புள்ளது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.மேலும், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றதிற்கும் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளின் அடிப்படையில் ஆட்சி அமைவதும் பிரதமரும் முதலமைச்சரும் தேர்ந்தெடுக்கப்படுவதும் அரசியல் சாசனப்படி நடைமுறையாக இருப்பினும் 1996க்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பிரதமர் முதலமைச்சர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பதும் வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய நடைமுறையானது குறிப்பாக 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளிப்படையாக நடைபெற்றது. இப்படியொரு பிரதமரும் முதலமைச்சரும் முதன்மைப்படுத்தாத கட்சிகளையும் கூட்டணிகளையும் மக்களும் ஊடகங்களும் முதன்மைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளப்பட்டது. கருத்தில் கொள்ளப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு எமது கூட்டணியின், குறைந்தபட்ச செயல்திட்டம், முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தமிழக தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், ஆகிய கட்சிகள் இணைந்த இக்கூட்டணியை புதிய பார்வை அணி என அழைப்பதென தீர்மானிக்கப்பட்டது. எமது அணியின் குறைந்தபட்ச திட்டங்களின் அடிப்படையில் இணைந்து செயல்பட பிற கட்சிகளையும் அமைப்புக்களையும் பொதுமக்களையும் அன்போடு அழைக்கிறோம்.

கூட்டணி கட்சிகள்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

தேசிய மக்கள் சக்தி கட்சி

இளந்தமிழர் முன்னணி கழகம்

காந்தீய சமதர்ம இயக்கம்